Saturday, March 5

எகிப்து புரட்சி - அமெரிக்கா - இஸ்ரேல் - முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்

-----------------
எகிப்து புரட்சி குறித்த தகவல்கள் இந்த பதிவின் இறுதியில் update செய்யப்படுகின்றன.
------------------

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
  
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

எகிப்து - உலக நாடுகள் அனைத்தின் பார்வையும் இன்று இந்த நாட்டின் மீது தான் திரும்பியுள்ளது. சீனா தொடங்கி அமெரிக்கா வரை பல அரசாங்கங்களை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது எகிப்தில் நடக்கும் மக்கள் போராட்டம். 

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில்,

  • எதனால் இந்த புரட்சி? 
  • புரட்சி எப்படி தொடங்கியது?
  • இதன் பின்னணியில் யார் இருப்பதாக அரசு குற்றஞ்சாட்டியிருக்கின்றது?
  • மக்கள் போராட்டத்தின் போது நடந்த சம்பவங்கள்.
  • எகிப்து அதிபர் பதவி விலகினால் அடுத்து என்ன நடக்கும்?
  • எதுமாதிரியான ஆட்சி அடுத்து அமையலாம்?
  • இந்த புரட்சி குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகம் கவலைப்படுவதற்கு என்ன காரணம்?     
என்று இந்த புரட்சி குறித்து விரிவாக பார்க்கவிருக்கின்றோம்.

எதற்காக இந்த புரட்சி? 

இது நம்மில் பெரும்பாலானோர் அறிந்த விசயம்தான்.

வறுமை, வேலையில்லா திண்டாட்டம், அரசாங்கத்தில் ஊழல் மலிந்து கிடப்பது என்று இவை அனைத்திற்கும் எதிரான போராட்டம் தான் இந்த புரட்சி. எகிப்து மக்களை பொறுத்தவரை இவையெல்லாம் முடிவுக்கு வர வேண்டுமென்றால் தற்போதைய அதிபர் முபாரக் பதவி விலகி புதிய அரசு மக்களால் தேர்ந்தெடுக்க படவேண்டும். 

(மேலே பார்த்த காரணங்கள் மட்டுமல்லாமல், அதிபர் முபாரக் தன் மகனை அடுத்த அதிபராக்க முயன்றதும் ஒரு காரணம்)

கடந்த முப்பது ஆண்டுகளாக எகிப்தை ஆண்டு வரும் முபாரக் பதவி விலக சம்மதிக்கவில்லை. தற்போதைய அமைச்சரவையை கலைத்து விட்ட முபாரக், புதிய துணை அதிபரையும், பிரதமரையும் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சீர்திருத்தமும் நடக்கும் என்று அறிவித்துள்ளார். 

ஆனால் அதிபரின் இந்த நடவடிக்கைகள் எகிப்து மக்களிடையே எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இன்னும் கூடுதலாகவே போராட்டம் வலுவடைந்து வருகின்றது. முபாரக் பதவி விலகல் மட்டுமே அவர்கள் எதிர்ப்பார்ப்பது. அதற்கு குறைந்து எதையும் ஏற்க அவர்கள் தயாரில்லை. 
 
எப்படி தொடங்கியது போராட்டம்?

துனிசிய புரட்சி புத்துணர்ச்சியை கொடுக்க, சமூக தளங்களான ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்றவற்றில் ஆரம்பித்த அரசுக்கு எதிரான பிரச்சாரம் நாளடைவில் வலுவடைந்து, அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் வீரியம் கொண்டு எழ, கடந்த மாதம் 25 ஆம் தேதி, எகிப்து தலைநகர் கெய்ரோவின் வீதிகளில் இறங்கி போராட துவங்கினர் மக்கள்.      

ஆளும் தேசிய ஜனநாயக கட்சியின் அலுவலகங்களை நோக்கி பேரணி சென்ற மக்கள், நாட்டின் தேசிய தொலைக்காட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட தொடங்கினர். கெய்ரோவின் முக்கிய சந்திப்பான தஹ்ரிர் சதுக்கத்தில் அதிபருக்கு எதிராக கோஷமிட்டனர். சில மணி நேர அமைதிக்கு பிறகு, போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலவரம் ஏற்பட, கண்ணீர் புகை குண்டுகளை உபயோகப்படுத்த துவங்கியது காவல் துறை. 
 
நாட்டின் தலைநகரில் தொடங்கிய போராட்டம் பின்பு மற்ற நகரங்களுக்கும் வேகமாக பரவ தொடங்கியது. அலெக்ஸ்சான்ட்ரியா, மன்சூரா, அஸ்வான் என பல நகரங்களுக்கும் பரவிய போராட்டம் எகிப்து அரசை திக்குமுக்காட வைத்தது. 

புரட்சிக்கு பின்னணியில் யார் இருக்கின்றார்கள்?

நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கிய சில மணி நேரங்களில், இதற்கெல்லாம் காரணம் "முஸ்லிம் சகோதரத்துவ" கட்சிதான் (Muslim Brotherhood) என்று குற்றஞ்சாட்டியது அரசு.  

யார் இந்த முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர்?

எகிப்து அரசியலை உற்று நோக்கி கொண்டிருக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சத்தை இந்த கட்சி தான் உருவாக்கியிருக்கின்றது. முபாரக் வீழ்ந்து இவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால்? 

எகிப்திற்கான முன்னாள் இஸ்ரேலிய தூதர் எலி ஷேக்டு (Eli Shaked) சில தினங்களுக்கு முன் எகிப்து புரட்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், எகிப்தில் தேர்தல் நடந்தால், முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் தான் அதிகமிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
  
எகிப்தின் முக்கிய எதிர்க்கட்சியான இவர்களைப் பற்றி முதலில் பார்த்து விடுவோம். 

1928 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கட்சியின் குறிக்கோள், எகிப்தில் ஒரு முழுமையான இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வர வேண்டுமென்பதே ஆகும். வரலாற்றில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்துள்ள இந்த அமைப்பு அரசியல் ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது, இவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், மதம் சார்ந்த ஒரு இயக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது .  

மக்களிடையே குறிப்பிடத்தக்க ஆதரவை இந்த கட்சி பெற காரணம், இவர்களின் சமுதாய பணிகள் தான். 2005 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்த கட்சி போட்டியிட தடை இருந்தாலும், இதன் உறுப்பினர்கள் சுயேட்சையாக நின்று 20% இடங்களை கைப்பற்றினார்கள் (இவ்வளவுக்கும் அந்த தேர்தலில் ஆளுங்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருந்தது).

பிறகு ஒரு ஆவணத்தை வெளியிட்டு தன்னுடைய செல்வாக்கை பெருமளவு இழந்தது இந்த அமைப்பு. அதாவது, 2007 ஆம் ஆண்டு, தங்களின் அரசியல் நிலைபாடு குறித்து இவர்கள் வெளியிட்ட ஆவணத்தில், அதிபராக ஒரு பெண்ணையோ அல்லது கிருத்துவரையோ அனுமதிக்க போவதில்லை என்ற தெரிவித்திருந்தனர். எகிப்து மக்கள் பெருமளவில் இந்த கருத்தை எதிர்த்தனர்.

கிருத்துவர்கள் மீது இந்த அமைப்பினருக்கு எந்தவொரு பாரபட்சமும் இல்லை. இதனை நீண்ட காலமாக இவர்கள் தெளிவுபடுத்தி தான் வந்திருக்கின்றனர். ஆனால் ஒரு கிருத்துவரை அதிபராக்க முடியாது என்பது அவர்களது அரசியல் நிலைபாடாக இருந்தது. எதிர்ப்பு அதிகளவில் கிளம்ப, தங்களின் இந்த ஆவணம் ஒரு முன்னோட்டம் மட்டுமே ஒழிய இறுதி முடிவு கிடையாது என்று கூறி தன்னுடைய கருத்தை திரும்ப பெற்று கொண்டது இந்த அமைப்பு.

வரலாற்றை நாம் கூர்ந்து கவனித்தால் ஒன்றை புரிந்து கொள்ளலாம். அதாவது, எகிப்தில் நடந்த அரசியல் பிரச்சனைகளுக்கு பின்னணியில் இவர்கள் இருந்திருக்கின்றார்கள். அதனாலேயே வரலாறு முழுக்க இந்த கட்சியினர் எகிப்திய அரசாங்கத்தால் அதிக அளவில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அரசுக்கு எதிராக ஒரு பிரச்சனை நாட்டில் எழுகின்றது என்றால், அரசாங்கத்தின் சந்தேக கண்கள் முதலில் விழுவது இவர்கள் மேலாகத்தான் இருக்கும்.

அந்த காரணத்தினாலேயே தற்போதைய புரட்சிக்கும் இந்த இயக்கத்தினர்தான் தான் காரணம் என்று அரசு குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டில் உண்மையிருக்கின்றதா? 

இல்லையென்று மறுக்கின்றனர் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர். இந்த புரட்சிக்கு முதலில் விதை போட்டவர்கள் சமூக ஆர்வலர்கள் என்றும், பின்னர் தான் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கின்றன ஊடகங்கள்.    

போராட்டத்தில் தாமதமாக குதித்தனர் என்றாலும், இவர்கள் மக்களுடன் அணி சேர்ந்த பிறகு போராட்டம் மிக வலிமையானதாக மாற தொடங்கியது. சில நாட்களில் இவர்களே பெரும்பாமையினராக இருக்கக்கூடிய அளவு போராட்டம் மாறியது.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் வீடு வீடாக சென்று மக்களை அழைத்து அடுத்த நாளும் போராட்டத்தின் வீரியம் குறையாமல் பார்த்து கொண்டனர்.

இவர்கள் ஆதரவால் மிகப்பெரிய அளவில் பல நகரங்களிலும் மக்கள் பேரணி நடத்த ஆரம்பித்தனர். இந்த இயக்கத்தின் தலைவர்கள் தொடர்ச்சியாக கைதானார்கள்.

ஜனவரி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ஜூம்மா தொழுகைக்கு பிறகு போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. போராட்டகாரர்களுக்கும், போலிசாருக்கும் இடையே நடைப்பெற்ற சண்டையில் இதுவரை சுமார் 125 பேர் வரை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

புரட்சி கால நிலவரம்:

கெய்ரோ நகரின் முக்கிய சந்திப்பான தஹ்ரிர் சதுக்கம் வரலாற்று முக்கியத்துவத்தை பெற ஆரம்பித்திருக்கின்றது. அங்கேயே தொழுகின்றனர், போராடுகின்றனர்.
அதிபர் முபாரக் பதவி விலகும்வரை இந்த சதுக்கத்தை விட்டு விலகப்போவதில்லை என்று அறிவித்திருக்கின்றனர் போராட்டகாரர்கள்.

அணுசக்தி முகமையின் முன்னாள் தலைவர் முஹம்மது அல்-பரேடி கடந்த 27 ஆம் தேதி எகிப்து திரும்பி போராட்டத்தில் தன்னையும் இணைத்து கொண்டார்.

போராட்டம் தொடங்கிய சில நாட்களுக்கு பிறகு போலீசார் பலரை காணவில்லை. அவர்களும் போராட்டத்தில்  குதித்திருக்கலாம் என்று அல்ஜசீரா ஊடகம் தெரிவிக்கின்றது.

சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் இருப்பதால், திருட்டு சம்பவங்களை தடுக்க, எகிப்து மக்கள் தங்களுக்குள்ளாக அணிகளை உருவாக்கி வீடுகள், ஓட்டல்கள், அங்காடிகள், அருங்காட்சியகங்கள் என பொது மற்றும் தனியார் சொத்துக்களை பாதுகாத்து வருகின்றனர். இதற்கு அனைத்து கட்சியினரும் உதவி புரிகின்றனர்.

இராணுவத்தினர் மக்களுடன் ஒத்துழைப்பதாக செய்திகள் வருகின்றன. தற்போது பணிக்கு திரும்பியுள்ள போலிசாரின் நடவடிக்கை எப்படி இருக்குமென்று தெரியவில்லை.

மக்களின் போராட்டம் சட்டத்திற்கு உட்பட்டது தான் என்றும், தங்கள் எண்ணங்களை அமைதியான முறையில் வெளிப்படுத்த மக்களுக்கு உரிமை உண்டென்றும், மக்களை நோக்கி எவ்விதமான தாக்குதலையும் நிகழ்த்த மாட்டோமென்றும் எகிப்து இராணுவம் அதிகாரப்பூர்வமாக உறுதி அளித்துள்ளது. மேலும், மக்களை காப்பதே இராணுவத்தின் முதல் பொறுப்பு என்றும் கூறியுள்ளது. இராணுவத்தின் ஆதரவும் மக்கள் பக்கம் இருப்பதால் முபாரக் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், சுமார் 125 பேர் இந்த புரட்சியின் போது இறந்திருப்பதாக கூறப்பட்டாலும், தற்போதைய நிலைமை சுமூகமாகவே இருக்கின்றது. ராணுவத்தினர், காவல் துறையினர் மற்றும் மக்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி கொள்ளும் காட்சிகளும் நடந்தேறுகின்றன. 
 
இந்த புரட்சி குறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அதிக அளவில் கவலைப்பட என்ன காரணம்?

அமெரிக்காவை பொறுத்தவரை, மற்றொரு ஈரானாக எகிப்து ஆகிவிடக்கூடாது என்ற பயம். ஏனென்றால், 1979 ஆம் ஆண்டு ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சி பல பாடங்களை அமெரிக்காவிற்கு புகட்டியுள்ளது. அதாவது, புரட்சிக்கு முன்பு இருந்த ஈரானிய அரசாங்கம் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டியது. ஆனால் புரட்சிக்கு பின்னரான அரசாங்கம் இன்று வரை அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகின்றது.

அன்று அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ஜிம்மி கார்ட்டர். புரட்சிக்கு பின்பான அரசாங்கமும் தனக்கு ஆதரவாக இருக்குமென்று கார்ட்டர் எண்ணியிருக்க வேண்டும். ஆனால் இறைவன் நாடியதோ வேறொன்றை. அன்று கார்ட்டருக்கு ஏற்பட்ட நிலைமை இன்று ஒபாமாவுக்கு ஏற்பட்டிட கூடாதென்பதே அமெரிக்காவின் அச்சம். ஏனென்றால் தற்போதைய அதிபர் முபாரக் அமெரிக்க ஆதரவாளர்.

அதனாலேயே, உலகம் முழுவதும் முபாரக் பதவி விலக வேண்டுமென்று குரல்கள் ஒலித்து கொண்டிருக்க, அமெரிக்க அரசாங்கமோ, முபாரக் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டுமென்று கூறி கொண்டிருந்தது.

இஸ்ரேல் நிலைமையோ இன்னும் சற்று ஆழமாக கவனிக்கப்பட வேண்டியது. இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாஹு வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்,  ஈரானைப் போல எகிப்தும் ஆகலாம் என்று.

அமெரிக்காவை விட இஸ்ரேல் அதிகமாக கவலைப்பட காரணம் தற்போதைய பிரச்சனையால் தன்னுடைய பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று நினைப்பதால் தான். கடந்த முப்பது ஆண்டுகளாக இஸ்ரேலும், எகிப்தும் நட்பு பாராட்டி வருகின்றன (இதனை முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் கடுமையாக எதிர்த்து வந்திருக்கின்றனர்)

எகிப்தினுடனான நட்பு காலங்களில் பொருளாதாரத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது இஸ்ரேல். தன்னுடைய எல்லைக்கோட்டை எகிப்துடன் பகிர்ந்து கொண்டிருக்கும் இஸ்ரேல், இந்த அமைதி காலங்களில் பெருமளவு செல்வத்தை ராணுவத்துக்கு செலவழிக்காமல் நாட்டின் வளர்ச்சிக்கு செலவழித்திருக்கின்றது.

எகிப்துடனான போர்க்காலங்களில் சுமார் 23% வருவாயை ராணுவத்துக்கு செலவழித்த இஸ்ரேல், எகிப்துடனான அமைதிக்கு பிறகு 9% மட்டுமே தன் ராணுவத்துக்கு செலவிடுகின்றது. அதுபோல, எகிப்தினுடனான பகை காலத்தில் ஆயிரக்கணக்கில் தன் படைகளை நிறுத்தி வைத்திருந்த இஸ்ரேல், இப்போது சில நூறுகளில் மட்டுமே வீரர்களை நிறுத்தி வைத்திருக்கின்றது.

ஆக, எகிப்து என்னும் பெரிய நாடு அவர்களுடன் நட்புடன் இருப்பது என்றுமே அவர்களுக்கு நல்லது. இதற்கு இந்த புரட்சி மூலம் பங்கம் வந்து விடுமோ என்று தான் அஞ்சுகின்றது இஸ்ரேல். அவர்களுடைய சமீபத்திய அறிக்கைகள் அவர்களது கவலையை நன்றாகவே பிரதிபலிக்கின்றன.

ஆட்சி மாறுவது அவர்களுக்கு பிரச்சனையில்லை. எதுமாதிரியான புதிய அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தடுக்க போகின்றார்கள் என்பதுதான் இப்போது அவர்கள் முன்னால் இருக்கும் மிகப்பெரிய கவலை. முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது அவர்களது தற்போதைய எண்ணமாக இருந்தாலும் இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

புரட்சிக்கு பின் என்ன நடக்கும்?

அதிபர் முபாரக் முன்மொழிந்திருக்கும் எந்தவொரு சீர்த்திருத்த நடவடிக்கையையும் ஏற்றுகொள்ள தற்போதைய நிலையில் மக்கள் தயாரில்லை. அதனாலேயே இன்னும் மிகப்பெரிய போராட்டத்தை நேற்று நடத்தி காட்டினர் மக்கள்.  மொத்ததில், முபாரக் பதவி விலகுவது மட்டுமே தீர்வாக அமையும்.

அப்படி ஒருவேளை அதிபர் முபாரக் பதவி விலகினால், இடைக்கால அரசு அமையலாம். அணுசக்தி முகமையின் முன்னாள் தலைவர் முஹம்மது அல்-பரேடி அதிபராக பொறுப்பேற்கலாம்.

பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படலாம்.

எதுமாதிரியான அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுப்பர்?

எகிப்தின் மக்கள் தொகையில் சுமார் 10% கிருத்துவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் (95%) காப்டிக் கிருத்துவர்கள் (இவர்கள் கிருத்துமஸ்சை ஜனவரி 7 ஆம் தேதி கொண்டாடும் பழக்கத்தை கொண்டவர்கள். காப்டிக் என்றால் "எகிப்திய" என்று அர்த்தம் வரும்). காலங்காலமாக எகிப்தில் வசித்து வருபவர்கள். இன்றைய எகிப்து முஸ்லிம்களின் முன்னோர்கள் காப்டிக் கிருத்துவர்களாக இருந்தவர்கள் தான்.

தங்கள் நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டிருப்பவர்கள் எகிப்து கிருத்துவர்கள்.

கிருத்துவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே உள்ள நட்பும் நெகிழ்ச்சி தரக்கூடியது. கிருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் அவ்வப்போது நடந்தாலும் எகிப்தியர்கள் ஒற்றுமையுடனே இருக்கின்றார்கள். உதாரணத்துக்கு, சமீபத்தில் ஒரு சர்ச்சில் நடந்த கோர குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு (இரண்டு பாதிரியார்களின் மனைவிகள் இஸ்லாத்தை தழுவியதால் கிருத்துவ மடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விடுவிக்கப்படாதவரை கிருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தது) பிறகு, தேவாலயங்களில் நடந்த பிரார்த்தனை கூட்டங்களுக்கு மனித சங்கிலி அமைத்து கிருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் முஸ்லிம்கள்.

ஆக, கிருத்தவர்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்ட எந்தவொரு கட்சியையும் ஆட்சியில் உட்கார வைக்க மாட்டார்கள் எகிப்து மக்கள். அதுமட்டுமல்லாமல், இப்போது நடப்பது மக்கள் புரட்சி. இதில் முஸ்லிம்கள், கிருத்துவர்கள் என்று அனைவரும் ஒற்றுமையுடன் பங்கேற்று கொண்டிருக்கின்றனர்.

மொத்தத்தில், கிருத்துவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கட்சிக்கே மக்களின் ஒட்டு விழும்.

எகிப்து பிரச்சனையின் முழு சாராம்சமும் இவைதான். தற்போதைய சூழ்நிலையில், எகிப்து மக்களின் போராட்டத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழிதான் உள்ளது. அதிபர் முபாரக்கின் பதவி விலகல் தான் அது.

(இதனை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் (feb 2, 2011), அதிபர் முபாரக் தனது பதவி காலம் முடியும் வரை (செப்டம்பர், 2011) பதவியில் நீடிக்க போவதாக குறிப்பிட்டுள்ளார். மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், முபாரக் உடனடியாக பதவி விலக வேண்டுமென்றும் போராட்டகாரர்கள் தெரிவித்து உள்ளனர்.

Update: 

04/02/2011 - கடந்த இரு நாட்களாக ஆர்ப்பாட்டகாரர்களுக்கும், முபாரக் ஆதரவாளர்கள் என்று சொல்லப்பட கூடியவர்களுக்குமிடையே நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பிறகு, இன்று மிகப்பெரிய போராட்டத்துக்கு மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர். "முபாரக் வெளியேறும் நாள்" என்று அழைக்கப்படும் இந்த நாள் உலகளவில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

எகிப்து மக்கள் அதிசயக்கும் விதமாக, முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது அரசு. ஆனால் இதனை அந்த இயக்கத்தினர் மறுத்து விட்டனர். முபாரக் முதலில் வெளியேற வேண்டுமென்றும், பின்பு அனைத்து கட்சிகள் இடம்பெறக்கூடிய தற்காலிய அரசை நியமிக்க வேண்டுமென்றும் கூறியிருக்கிறது அந்த கட்சி.

மில்லியன் கணக்கான மக்கள் திரண்டிருப்பதாகவும், அமைதியான முறையில் போராட்டம் நடப்பதாகவும் அல் அரேபியா ஊடகம் தெரிவித்துள்ளது.

அதிபர் மாளிகையை நோக்கி பேரணி நடக்கப்போவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அல்ஜசீராவின் கெய்ரோ அலுவலகம் தாக்கப்பட்டு கருவிகள் உடைப்பட்டுள்ளதாக அந்த தளம் தெரிவித்துள்ளது.

05/02/2011 - பனிரெண்டாவது நாளாக போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

அதிபர் முபாரக் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கட்சியின் தலைமை உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருக்கின்றார்கள். கட்சியின் புதிய பொதுச்செயலாளராக ஹோசம் பட்ரவி நியமிக்கப்படுள்ளார். இவர், அதிபர் முபாரக்கின் மகன் கமல் முபாரக் வகித்து வந்த கட்சியின் அரசியல் பிரிவு தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்கின்றார்.

06/02/2011 - பதிமூன்றாவது நாளாக போராட்டம் தொடர்கின்றது.

ஆளும் கட்சியின் தலைமை உறுப்பினர்களின் பதவி விலகல் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளதாக பி.பி.சி தெரிவிக்கின்றது.

திருப்புமுனையாக, முஸ்லிம் சகோதரத்துவ கட்சி பேச்சு வார்த்தைக்கு சம்மதித்து உள்ளது. மக்களின் உணர்வுகளை அரசாங்கத்திடம் எடுத்துரைக்கவே இந்த நடவடிக்கை என்று அது தெரிவித்துள்ளது

அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு, நீதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் கொண்ட கூட்டு குழுவை உருவாக்குவதென பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டதாக எகிப்து தேசிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

முபாரக் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும், அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும், இந்த அரசால் அரசியல் உள்நோக்கோடு கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட தங்களுடைய இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயப்போவதில்லை என முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இன்றும் லட்சகணக்கானோர் தஹ்ரிர் சதுக்கத்தில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் இறந்தவர்களுக்காக சிறப்பு தொழுகையை முஸ்லிம்களும், சிறப்பு பிரார்த்தனையை கிருத்துவர்களும் அங்கே மேற்கொண்டனர்.

08/02/2011 - பதினைந்தாம் நாளாக போராட்டம் தொடர்கின்றது. அதே நேரம் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்புகின்றது. பொதுத்துறை ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வை அறிவித்துள்ளது அரசு.

09/02/2011 - நேற்று மதியத்திலிருந்து போராட்டங்கள் மீண்டும் வலுப்பெற தொடங்கியுள்ளன. நாடு திரும்பி போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வெளிநாடுவாழ் எகிப்தியர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலமாக செய்தி பரப்பப்படுகின்றது. எகிப்தியர்கள் பலர் நாடு திரும்பி போராட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். மற்றுமொரு பிரமாண்ட பேரணியை வரும் வெள்ளிக்கிழமை நடத்தி  காட்ட மக்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

10/02/2011 - பதினேழாவது நாளாக போராட்டம் தொடர்கின்றது. அதிபர் முபாரக் இன்று பதவி விலகுவார் என்ற செய்தி பரவுவதால் பரபரப்பு அதிகரித்திருக்கின்றது.

21:00 local - இன்னும் ஒரு  மணி நேரத்தில் முபாரக் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்ற இருக்கின்றார். மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தி இருக்கின்றது. 

லட்சகணக்கான மக்கள் அனைத்து நகரங்களிலும் திரண்டிருக்கின்றார்கள். அல்லாஹு அக்பர் என்ற கோஷம் விண்ணை பிளக்கின்றது.

பதவி விலக போவதில்லை என்று மீண்டும் அறிவித்தார் முபாரக்.

11/02/2011 - முபாரக்கின் நேற்றைய பேச்சு மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இன்று ஜும்மாஹ் தொழுகைக்கு பிறகு பிரமாண்ட ஆர்பாட்டத்திற்கு மக்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்

6:03 PM (local) - முபாரக் பதவி விலகியதாக துணை அதிபர் அறிவித்தார்)

இன்ஷா அல்லாஹ், துவா செய்வோம்.....

  • எகிப்து மக்களின் இந்த ஒற்றுமை நிலைக்க வேண்டுமேன்று...
  • எகிப்து மக்கள் எதிர்ப்பார்க்ககூடிய நல்லாட்சி அமைய வேண்டுமென்று...
  • பொருளாதாரத்தில் எகிப்து சிறந்து விளங்கி வறுமைகள் ஒழியவேண்டுமென்று...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.